
![]()
அத்தியாயம் 8
14/7/2007 சனிக்கிழமை இரவு 8.00 மணி மேரு கிள்ளானில் அமைந்துள்ள நியூ பாம் குரோவ் உணவகத்தில் கலந்துரையாடல் மற்றும் நிதி திரட்டும் இரவு விருந்து
25 நவம்பர் 2007 அன்று ஒரு லட்சம் இந்தியர்கள் கோலாலம்பூர் மாநகரில் திரண்ட அந்த வரலாற்று பூர்வ நிகழ்விற்கு வித்திட்டது இந்த விருந்தாகும். மக்கள் சக்தி என்ற மாபெரும் எழுச்சி உணர்வலை இங்கேதான் தற்செயலாக விதைக்கப்பட்டது. ஆனாலும், அந்த எழுச்சி உணர்வலை மிக சிறிய அளவில் தான் அந்த விருந்தோம்பலில் உணரப்பட்டது.
சீன ஞானி கன்பூசியஸ் “ஆயிரம் மைல்களின் பயணம் ஒரு அடியில் தான் ஆரம்பமாகிறது” என்று கூறியுள்ளார். வேதமூர்த்தியும் நானும் செல்லும் இடமெல்லாம் இந்நாட்டு இந்தியர்களின் பரிதாகபகர நிலையை எடுத்து விளக்கினோம். இதை நாள்தோறும் நாங்கள் செய்து வந்தோம். கே.ஆறுமுகம் இந்நிகழ்வின் இன்னொரு பேச்சாளராக பங்கு பெற்றார். மனோகரன் மலையாளம் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டார் ஆனால் உரையாற்றவில்லை. இக்காலக்கட்டத்தில் கங்காதரனும் கணபதிராவும் நம்முடன் இல்லை. அவர்கள் இருவருமே நம்முடன் இல்லை எனும் பொழுது இந்த ஏஎஸ்பியைப் பற்றி நான் சொல்ல வேண்டிய தேவையில்லை. அந்த விருந்தில் பேசிய நான், அனைத்து சட்ட வழிமுறைகளையும், நட்புக்கர பாதைகளையும் நாம் தாண்டி விட்டோம் என்று கூறினேன். அப்படி இருந்தும் இந்த அம்னோ அரசு நமக்கு நியாயம், சம நீதி, சம வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்க தொடர்ந்து மறுத்து வருவதாகவும் சொன்னேன். இந்நாட்டு ஏழை எளிய இந்தியர்களுக்கு தேசிய நீரோட்டத்தில் பங்கு பெறும் வண்ணம் அரசு எவ்வித உதவிகளையும் செய்யவில்லை என்றும் நான் கூறினேன். இதை நான் தெரிவிக்கும் சமயம், கொஞ்சம் நகைச்சுவை கலந்த தொனியில் பேசினேன். வேதமூர்த்தி இந்த முறையை ஆதரிக்கவில்லை. நான் கூற வந்த கருத்து என் நகைச்சுவை கலந்த பேச்சால் அடிபட்டு போகும் அபாயம் இருப்பதாக அவர் கருதினார். அந்த விருந்தில் குழுமியிருந்த 1,000 பேர்கள் மத்தியில், நான் பேசும் சமயம் மயான அமைதி நிலவியது. நான் கூறும் விஷயங்களை அங்கிருந்த மக்கள் கூர்மையாக கேட்பதை என்னால் உணர முடிந்தது. இதைக் கண்ட நான் ஆச்சரியப்பட்டு போனேன்.
மலேசிய இந்திய மக்களிடையேயும் இதர சமூகத்தினரிடையேயும் என் போராட்டம் வெற்றி பெறவில்லையே என்ற துக்கத்தில் நான் இருந்த சமயம் அது. அவ்வேளையில் என் உரையை கூர்ந்து கேட்கும் என் சகோதர சகோதரிகளை கண்டு நான் ஆச்சரியப்பட்டு போனதில் வியப்பில்லை தான். 2001 ஆம் ஆண்டு கம்போங் மேடானில் இந்தியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன படுகொலையின் பொழுது நான் தன்னந்தனியாக நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். சாதாரண உடையில் இருந்த மலேசிய பாதுகாப்பு படையினரும் மற்றும் அம்னோ ஏவிவிட்ட அடியாட்களும் கம்போங் மேடானில் வாழ்ந்து வந்த இந்தியர்களுக்கு எதிராக இன படுகொலையை வெற்றிக்கரமாக நடத்தியது. மலாய் முஸ்லிம் கும்பல் இந்த இரத்தக் களரியை நடத்தியது. 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் இந்நிகழ்வில் படுகாயம் அடைந்தனர்.


