12.8.2007 தேதியிடப்பட்ட ஹிண்ட்ராப்பின் 18 அம்ச புள்ளி கோரிக்கையின் 14ஆவது கோரிக்கையாக மாதத்திற்கு ரிம.1,500.00 குறைந்தபட்ச சம்பளமாக கோரிக்கை விடப்பட்டிருந்தது. (2007இல் ரிம.1,000.00) என்று ஹிண்ட்ராப் மூத்த தலைவர் பி.உதயகுமார் கூறினார்.
இக்கோரிக்கை விடுக்கப்பட்டு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது குறைந்தபட்ச சம்பளமாக மாதத்திற்கு வெறும் ரிம.900.00 மட்டுமே என்று அரசாங்கம் அறிவித்ததுள்ளதும் அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் தினமான மே முதல் தேதியிலிருந்து அமல்படுத்த அரசாங்கம் தவறியதும் மக்களுக்கு பெரிதளவு ஏமாற்றத்தை வழங்கியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
மேலும் இக்குறைந்தபட்ச சம்பள உத்தரவு எப்பொழுது கெசட் செய்யப்படும் என்று தெரியாத நிலையில், கெசட் செய்த பிறகும் அமலுக்கு வர 12 மாதக் காலங்கள் வரை மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு இன்னும் கூடுதல் காலத்திற்கு நீட்டிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் கொள்கை முடிவு அறிவிப்பு மக்களுக்கு மற்றுமொரு அதிருப்தியை அளித்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து இந்நாட்டிற்கு தருவிக்கப்பட்ட பணிப்பெண்களுக்கான குறைந்தபட்ச மாத சம்பளமாக பிலிப்பைன்ஸ் அரசு ரிம.1,500.00 நிர்ணயித்திருக்கும் வேளையில் உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு வெறும் ரிம.900.00 என்பது நியாயமற்ற செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டில் வேலை செய்து வரும் 2.1 மில்லியன் அந்நியத் தொழிலாளர்களும் இக்குறைந்தபட்ச சம்பளத் தொகையில் உள்ளடங்கியிருப்பதால் அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதால் மட்டுமே கோரிக்கை விடப்பட்டிருக்கும் ரிம.1500.00 குறைந்தபட்ச சம்பளத்திட்டத்தை அமலுக்குக் கொண்டுவர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். காரணம் அந்நியத் தொழிலாளர்களின் 2.1 மில்லியன் உயர்ந்த எண்ணிக்கையே இந்நாட்டு மக்களின் குறைந்தபட்ச சம்பளம் குறைவாக நிர்ணயிக்கப்பட காரணியாக விளங்குகிறது. அந்நியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ரிம.900.00ஐக் காட்டிலும் உள்நாட்டுத் தொழிலாளர்களின் வாழ்வு செலவீனங்களை ஈடுகட்டும் பொருட்டு கூடுதலாக மாதத்திற்கு ரிம.500.00 வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் ஹிண்ட்ராப் பரிந்துரைத்துள்ளது.
மனிதவள ஆற்றலை விநியோகிக்கும் தனியார் நிறுவனங்களும் வர்த்தகங்களும் இந்த அந்நியத் தொழிலாளர்களின் மூலம் நூற்றுக்கணக்கிலான மில்லியன் கணக்கில் லாபம் அடைகின்றனர். ஆனால் நாள் ஊதியம் அல்லது மாத ஊதியம் பெற்றுவரும் 90% இந்தியர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரிம.1,500.00 வழங்கினால் மட்டுமே அவர்களுக்கு நியாயமானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் எதிர்வரும் 2020க்குள் மாதத்திற்கு ரிம3,000.00 என்ற முறையில் உயர்ந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களின் நாடாக உருவாகும் மலேசியாவின் திட்டத்திற்கு இத்தொகை வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
அதுமட்டுமின்றி ரிம.3,000.00 மற்றும் அதற்கும் குறைவாக வருமானம் பெறுபவர்கள் வசதி குறைந்தவர்கள் மற்றும் எழ்மை நிலையிலுள்ளவர்கள் என்ற முறையில் இவர்களுக்கு பிரிம் மக்கள் உதவித் தொகையின் மூலம் ரிம.500 வழங்கப்பட்ட வேளையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வாக குறைந்தபட்ச சம்பளமாக ரிம.1,500.00 வழங்கியிருந்தால் அதுவே அவர்களுக்கு சரியான துவக்கமாகவும் அமைந்திருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
மலாய் முஸ்லிமினர் மற்றும் ஏழை இந்தியர் ஆகிய இருவரும் குறைந்தபட்ச சம்பளமாக ரிம.900.00 பெறுவதில் நிறைய வேறுபாடு உள்ளது. மலாய் முஸ்லிமினர் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தனியார் திறன் பயற்சி கல்லூரிகளுக்காகவோ அல்லது உயர்நிலைக் கல்விக்காகவோ நிதிச் சேமிக்கத் தேவையில்லை. காரணம் அவர்களில் பெரும்பாலானோர்களுக்கு உபகாரச் சம்பளம், கல்வி கடனுதவி திட்டமும் அரசாங்காத்தினால் வழங்கப்படுகிறது. ஆனால் வேறு எந்த உதவியுமின்றி தங்களின் சம்பளத்தை மட்டுமே வைத்து வாழ்க்கையை நகர்த்தி வரும் இந்தியப் பெற்றோர்கள் வெறும் ரிம.900.00 சம்பளத்தை வைத்துக் கொண்டு தங்களின் பிள்ளைகளின் உயர்க்கல்விக்கும், திறன்பயிற்சி பாடத்திட்டத்தில் தங்களின் பிள்ளைகளை இணைக்க சேமிக்க இயலாமல் தினந்தோறும் வறுமையிலும் வேதனையிலும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இக்குறைந்தபட்ச சம்பளத்திற்கும் மேலாக மலாய் முஸ்லிமினருக்கென லெம்பாகா ஊருஸ் சாகாட், பைதுல்மால், தாபுங் ஹாஜி, கணக்கு வரையற்ற யாயாசான்கள், மற்றும் மலாய் முஸ்லிமினரின் வாழ்வாதாரத்தை எவ்வித முன்தொகையுமின்றி உயர்த்தும் நிறுவனங்களான பிஎன்பி, ஏஎஸ்என், ஏஎஸ்பி, மாரா போன்ற உயர்ந்த லாப ஈவு கொண்ட பங்கு உரிமைகள், எவ்வித முன்தொகையுமின்றி பல்வேறான வியாபாரங்களுக்கான திரும்ப செலுத்த தேவையில்லாத தொகை, மற்றும் சுலபமான முறையில் கடனுதவிகளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. ஆனால் ஏழை இந்தியர்களுக்கு வெறும் கண்துடைப்பிற்காக 0.1% மட்டுமே வியாபார வாய்ப்புகளோ அல்லது கடனுதவிகளோ வழங்கப்பட்டு பெரும்பாலோன ஏழை இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இறுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச சம்பளமான ரிம.900.00 தோட்டத் தொழிலாளர், லாரி ஓட்டுனர், ஜவுளி தொழிற்சாலை ஊழியர்கள், தங்கும் விடுதி பணியாட்கள் மட்டுமின்றி வீட்டுப் பணியாட்கள் மற்றும் தோட்டக்காரர்கள் ஆகிய ஆயிரக்கணக்கிலான ஏழை இந்தியர்களுக்கென நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் கிடையாது என்று அவர் குறிப்பிட்டார். இத்தொகை கமிஷன், அலவன்ஸ் போன்ற ஊக்கத் தொகைகளை உள்ளடக்கியுள்ளதால் ஏழை இந்தியர்களுக்கு இக்குறைந்தபட்ச சம்பளம் சிறிதளவும் அர்த்தமற்றது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.காரணம் இவர்களின் சம்பளத்தில் பாதி அவர்களின் கமிஷன், உற்பத்தி மற்றும் பயணக்கணக்கைப் பொறுத்துள்ளதால் அவர்களுக்கு இந்த குறைந்தபட்ச சம்பளமான ரிம.900.00ஐ அடைவதற்கு அவர்கள் அயராது உழைக்க வேண்டியிருக்கிறது என்றும் பி.உதயகுமார் குறிப்பிட்டிருந்தார்.


